Jan 31, 2012

கால் சுளுக்கு

நாம் நம் கடந்து வந்த பகுதி வாழ்க்கையில் இந்த வார்த்தையை பிறர் மூலம் கேட்டோ அல்லது நாமோ உணர்ந்து வந்து இருப்போம். கால் சுளுக்கு என்றால் என்ன? சுளுக்கு உடலில் எந்த பகுதியை பாதிக்கும்? இதை எப்படி தவிர்ப்பது? வந்த பின் மருத்துவம் செய்வது எப்படி? என்று இங்கே காணலாம்.

இந்த சுளுக்கு உடலில் உள்ள எந்த பகுதியை பாதிக்கிறது என்றால் உடம்பில் அனைத்து மூட்டுகளிலும் உள்ள ஜவ்வு பகுதியை பாதிக்கிறது. உடம்பில் அனைத்து மூட்டுகளிலும் அமைந்து உள்ள இந்த ஜவ்வு பகுதியை ஆங்கிலத்தில் லிகமென்ட் என்று மருத்துவர்கள் அழைப்பர்.

இந்த ஜவ்வு - லிகமென்ட்(ligament), மூட்டுகளுக்கு உறுதியை அளித்து, வலுவை கூட்டி தேவைய‌ற்ற இயக்கங்களை தவிர்த்து, மூட்டுகளை காயங்களில் இருந்து பாதுகாக்கிறது. இந்த சிறந்த பணியை செய்யும் ஜவ்வுகள் சில நேரங்களில் ஏற்படுத்தும் காயங்கள் மிகுந்த சிரமங்களை தரலாம். உடம்பில் உள்ள கணுக்கால் மூட்டு, முழங்கால் மூட்டு, மணிக்கட்டு, தோள்ப்பட்டை, முழங்கை மூட்டு போன்ற பகுதிகளில் உள்ள இந்த ஜவ்வுகள் எளிதாய் காயங்களுக்கு உள்ளாகலாம்.

சவ்வுகளில் காயங்கள் ஏற்பட சில காரணங்கள்,

1. வலுவற்ற ஜவ்வுகள் எளிதில் காயங்களுக்கு உள்ளாகலாம்.
2. போதிய பயிற்சிகள் அற்ற ஜவ்வுகள் .
3. திரும்ப திரும்ப உபயோகிக்கும் போது
4. சரியான பாதுகாப்பு அற்ற காலணிகள் அணியும் போது
5. வெளிச்சம் குறைவான பாதை, பார்வை குறைபாடு, கரடு முரடான பாதைகளில் நடக்கும் போதும்

இப்படி சவ்வுகளில் ஏற்படும் காயங்களை மருத்துவர்கள் காயத்தின் வீரியங்களை கொண்டு மூன்று நிலைகளாக பிரிக்கின்றனர். இந்த நிலைகளை கொண்டே குணப்படுத்தும் முறைகளும் மாறுபடுகிறது. அது என்ன அந்த முன்று நிலைகள்,

௧. முதல் நிலை - சிறிய காயம்.
௨. இரண்டாம் நிலை - ஜவ்வு சிறிதே கிழிந்த நிலை
௩. மூன்றாம் நிலை - ஜவ்வு முற்றிலும் கிழிந்த நிலை.

முன்பு கூறியது போல முதல் இரண்டு நிலைகளும் மருந்தின் மூலமும் இயன்முறை மருத்துவத்தின் மூலமும் எளிதாய் குணப்படுத்தும் நிலை ஆகும். இந்த இரண்டு நிலைகளை குணப்படுத்த ஜவ்வு காயங்களை உறுதி செய்த பின்பு ஐஸ் மூலம் ஒத்தடம் கொடுப்பது சிறந்த மருந்து. அதாவது இதனை ஆங்கிலத்தில் கிர்யோதேரபி(cryotherapy) என்பார்கள்.

கிர்யோதேரபி என்றால் நோய்களை மருந்து இல்லாமல் ஐஸ் மூலம் குணப்படுத்தும் முறை. அதாவது ஜவ்வுவில் காயங்களை மருத்தவர் மூலம் உறுதி செய்த பின் குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று முறை முதல் இரண்டு நாட்களுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனை செய்யும் போது ஐஸ் கட்டியை எடுத்து கொண்ட பின் அதனை பிளாஸ்டிக் பையில் அடைத்து அடிப்பட்ட பகுதியில் ஒத்தடம் அல்லது ஐஸ் கட்டியை கைக்குட்டைக்குள் போட்டு அடிப்பட்ட பகுதியில் மேலே தடவுவதின் மூலமும் ஒத்தடம் கொடுக்க வேண்டும் குறைந்தது பதினைத்து நிமிடங்கள் அளிப்பது தகுந்த பயனை தரும்.

இப்படி ஐஸ் ஒத்தடம் கொடுக்கும் போது காயங்களால் ஏற்படும் அழற்சி inflammation தடுத்து நிறுத்தப்படுவதோடு, ஜவ்வில் ஏற்ப்பட்ட காயம் எளிதில் குணமாக உறுதுணையாக இருக்கும்.

முதல் இரண்டு நாட்கள் கடந்த பின் தகுந்த இயன்முறை மருத்துவம் மேற்கொள்வதன் மூலம் காயம் அடைந்த சவ்வின் வலுவை திரும்ப பெற முடியும். மூன்றாம் நிலை சற்றே மோசமான நிலையாக இருப்பதால் மருத்துவர்கள் இதனை அறுவை சிகிச்சை மூலமே சரிசெய்ய முடியும்.

அதாவது கிழிந்த சவ்வின் பகுதிகளை நீக்கி விட்டு பின்பு கிழிந்த பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் தைத்து காயங்களை சரி செய்வார்கள். இதற்கு பிறகு குறைந்தது ஆறு முதல் எட்டு வாரங்கள் இயன்முறை மருத்துவர் ஆலோசனைப்படி பயிற்சிகளை மேற்கொண்டால், கிழிந்த சவ்வின் வலுவை திரும்ப பெறலாம்.

இது போன்ற ஜவ்வில் ஏற்ப்படும் காயங்கள் பொதுவாய் விளையாட்டு வீரர்களை அதிகம் பாதிக்கிறது, முறையான உடற்பயிற்சியும், தகுதியான இயன்முறை மருத்துவமும் இதோ போன்ற ஜவ்வில் ஏற்படும் காயங்களை வாராமல் தடுப்பதோடு, ஒரு சிறந்த விளையாட்டு வீரரை இந்த நாட்டிற்கு கொடுக்க முடியும், இது போன்ற ஜவ்வில் ஏற்படும் காயங்கள் விளையாட்டு வீரரின் விளையாட்டு திறனை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் அந்த விளையாட்டு வீரர் வாழ் நாள் முழுவதும் அந்த விளையாட்டை தொடராமலே போக வாய்ப்பு உள்ளது.

வருமுன் காப்போம் உடற்பயற்சி மூலம், வந்த பின் தகுதியான சிறந்த மருத்துவத்தை பின்பற்றுவோம்.


இப்படிக்கு
செந்தில்குமார்.தி
இயன்முறை மருத்துவர்.

Share